கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 48 பேர் பலியாகினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று அவர்கள் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 9 பெண்கள் உட்பட 168 பேர் விஷச்சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இன்னும் சிலர் சிகிச்சை பெறாமல் உள்ளார்கள்.
அவரை கண்டறிந்து உடனடியாக 55 பேர் வீடுகளில் சிகிச்சை பெறாமல் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். அதில், இப்போது வரையில் 48 பேர் மரணமடைந்துள்ளனர். அதில் கள்ளக்குறிச்சியில் 25 பேர், புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் 3 பேர், சேலத்தில் 16 பேர், விழுப்புரத்தில் 4 பேர் (3 பெண்கள் ஒரு திருநங்கை. அவர்களது குடும்பத்தை சந்தித்து நேற்றைக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கினார். மேலும், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு 67 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மருத்துவ கல்லூரியில் பணியாற்றக்கூடிய நபர்களுடன் இணைந்து 24 மணி நேரமும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 600 படுக்கைகளுடன் இருந்தாலும், இந்த பாதிப்பிற்கு உண்டானவர்களுக்காக 50 படுக்கைகள் தயாராகவே உள்ளது. மேலும், மெத்தனாலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக பார்வை பறிபோகும், இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவை படிப்படியாக செயலிழக்கத் தொடங்கும். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர் என்றார்.