ICICI : மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 17 ஆயிரம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளை ICICI வங்கி Block செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி , நாட்டின் மொத்த கிரெடிட் கார்டு வர்த்தகத்தில், மூன்றாவது பெரிய நிறுவனமாக திகழ்கிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகளில் 16.6% ஐசிஐசிஐ வங்கியால் நிர்வகிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், டெக்னோஃபினோ (TechnoFino) நிறுவனர் சுமந்த மண்டல் என்பவர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், ஐசிஐசிஐ வங்கி iMobile Pay செயலியில் வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்குக்கு பதிலாக வேறு வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பார்க்க முடிவதாக தெரிவித்தார். மேலும் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகியவற்றை டேக் செய்து, இந்த பிரச்சனையை விரைவாக சரிசெய்ய வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ஐசிஐசிஐ iMobile Pay செயலியில், பிற வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு நம்பர், காலாவதி தேதி மற்றும் CVV எண் ஆகியவை தெளிவாகக் காட்டப்படுவதாகவும், இதனால், பிறருடைய கிரெடிட் கார்டு தகவல்களைத் மற்றொருவர் தவறாகப் பயன்படுத்த இது வழிவகுக்கும் என்றும் சுமந்த மண்டல் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே பல ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயனாளர்கள் இதுதொடர்பாக புகார்களை எழுப்பி இருந்தனர். எனினும், டெக்னோஃபினோ நிறுவனர் சுமந்த், எக்ஸ் தளத்தில் இப்பிரச்னையை எழுப்பியதால், விஸ்வரூபம் எடுத்தது. அதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் தராதிருந்த ஐசிஐசிஐ வங்கி, உடனடியாக செயல்பட்டதுடன், புதிதாக பயன்பாட்டிற்கு வழங்கிய 17 ஆயிரம் கிரெடிட் கார்டுகளை பிளாக் செய்தது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஐசிஐசிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர், தங்களது மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் புதிதாக விநியோகிக்கப்பட்ட 17,000 கிரெடிட் கார்டுகளை, வங்கியின் டிஜிட்டல் சேனலில் Map செய்வதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை ஒப்புக் கொண்டார். இதன் காரணமாகவே, பிற வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு தகவல்கள், மற்றொரு வாடிக்கையாளரின் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனில் தோன்றியதாகவும் விளக்கமளித்தார்.
பாதுகாப்பு குறைபாடு உடைய 17,000 கிரெடிட் கார்டுகளை பிளாக் செய்துவிட்டதாகவும், இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்த ஐசிஐசிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர், கிரெடிட் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை என விளக்கமளித்தார்.
Readmore: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்!… மணிப்பூரில் பதற்றம்!