ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலை முக்கிய பங்காற்றியுள்ளதாக சென்னை காவல்துறை கூறுகிறது. தலைமறைவாகவுள்ள அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து அன்று மாலையே 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பிரபல ரவுடியின் மனைவியும், அ.தி.மு.க,. திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக துணை செயலாளரும் வழக்கறிஞருமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.போலீசார் விசாரணையில் தி.மு.க, வழக்கறிஞர் அருளுடன் மலர்க்கொடி தொடர்ச்சியாக தொலை பேசியில் பேசியது தெரியவந்துள்ளது.
மேலும் அவரது வங்கி பரிவர்த்தனைகளை கண்காணித்த போலீசார் அதனடிப்படையில் மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல கொலை வழக்கில் பாஜக நிர்வாகி மற்றும் அஞ்சலை என்பவருக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமறைவாக உள்ள அஞ்சலையை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.