திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 10 வயதான மோனிகா என்ற மகள் உள்ளார். இவர் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது 14 வயது மகள் ராஜலட்சுமி 9-ம் வகுப்புப் படித்து வந்தார். கோவிந்தராஜ் மற்றும் வேலு பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் பெங்களூருவில் இருந்து உறவினர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தை வாங்குவதற்காக தோழிகளான மோனிகா, ராஜலட்சுமி மற்றும் சிறுவர்கள் சிலர் நேற்று இரவு அந்த உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது, அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், மழைநீர் தேங்கியிருந்துள்ளது. அது 8 அடி ஆழமுள்ள பள்ளம் என்று அறியாத மாணவிகள் அதில் கால் நனைத்து, விளையாடுவதற்காக இறங்கியிருக்கிறார்கள். அது ஆழமான பள்ளம் என்பதால் உள்ளே விழுந்தவுடன் வெளியே வரமுடியாமல் தத்தளித்துள்ளனர். இதனால் பயந்து போன சிறுவர்கள், நடந்ததை குறித்து வீட்டில் கூறியுள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், ஓடிச்சென்று 2 மாணவிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளை பரிசோதித்த மருத்துவர்கள், 2 மாணவிகளும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
சாலைப் போடுவதற்காகவும், பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்புதவற்காகவும், பள்ளி வளாகத்தில் பள்ளம் தோண்டிப்பட்டது. கடந்த 1 மாத காலமாக பள்ளத்தை மூடாமல் அலட்சியமாக இருந்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.