பெங்களூருவில் பைக் டாக்ஸிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெருநகரங்களில் என்னதான் மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டாலும், ஆட்டோ சேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக தான் உள்ளது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆட்டோ தான் சரியான தேர்வாக உள்ளது. ஆட்டோ ஓட்டுவதை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான், ஆட்டோக்களுக்கு போட்டியாக பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை அதிகரித்துள்ளது. இந்த சட்டவிரோத சேவைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான், பெங்களூருவில் இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
சட்டவிரோத பைக் மற்றும் வைட்போர்ட் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பெங்களூரு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நாள்ளிரவு தொடங்கி திங்கட்கிழமை நள்ளிரவு வரை ஆட்டோக்கள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால், பெங்களூரு நகரில் இன்று மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.