தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு இரண்டு மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புரத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல்/மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும்
28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (மார்ச் 25) தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூறினார். அதோடு இரண்டு மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாநகராட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் புதிதாக ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார். தற்போது ரூ.17,455 கோடியில் 23 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 16 கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.