தருமபுரியில் ராணுவ வீரரின் மனைவியை குடும்பத்தோடு கடத்திச் சென்று அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது ஆலமரத்துப்பட்டி என்ற கிராமம். இங்கு 46 வயதான சமதர்மம் என்பவர் வசித்து வரும் நிலையில், மிசோரம் எல்லையில் ராணுவ வீரராக (பிஎஸ்எப்) பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலா (35). இந்த தம்பதிக்கு 17 வயதில் மகன், 15 வயதில் மகள் உள்ளனர். ராணுவத்தில் இருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வாராம் சமதர்மம். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி முதல் அமலாவையும், அவரது மகன், மகளையும், அமலாவின் அம்மாவையும் திடீரென காணவில்லை. இதனால் பதறிப்போன சமதர்மம், போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
அப்போதுதான், தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே மடதஅள்ளி கிராமத்தை சேர்ந்த அதியமான் என்பவர், இவர்களை கடத்திச் சென்று திருப்பூரில் அடைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அதாவது, ஒரு லாட்ஜில் அதியமானும், அமலாவும் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமலாவின் மகன், மகள் மற்றும் அம்மாவும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். போலீசார் அங்கு விரைந்து அனைவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, அதியமான் என்பவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக கடந்த 8 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி கஸ்தூரிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எனினும், நர்சிங் பயிற்சிக்கு வந்த ஜோதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அதியமான். இவருக்கு ஒரு மகள். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அமலாவின் அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது தன்னுடைய அப்பாவை, அமலா அருகிலிருந்து கவனித்து கொண்டார். அந்த நேரத்தில்தான், வார்டுக்கு வந்து சென்ற அதியமானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அரசு வேலை வாங்கி தருகிறேன், 7 லட்சம் ரூபாய் கொடு என்று கேட்டாராம் அதியமான். உடனே, ராணுவத்திலிருந்து கணவர் சம்பாதித்து அனுப்பும் பணத்தில் இருந்து ரூ.7 லட்சத்தை அதியமானிடம் தூக்கிக் கொடுத்தாராம் அமலா. இதுபோலவே, அமலாவின் உறவினருக்கு கோர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமும் ரூ.7 லட்சம் வாங்கியுள்ளார் அதியமான். ஆனால், எந்த அரசு வேலையையும் அவர் வாங்கித் தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை அமலா திரும்ப கேட்டதால், ஆத்திரமடைந்த அதியமான், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்தபோது எடுத்த படங்கள், வீடியோக்களை, அமலாவுக்கே தெரியாமல் எடுத்த நிர்வாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.
இதனால் பயந்துபோய் யாரிடமும் சொல்லாமல் தவித்து வந்துள்ளார் அமலா. இப்படிப்பட்ட சூழலில்தான், அமலாவை கடந்த 28ஆம் தேதி மகன், மகளுடன் கடத்திச்சென்று திருப்பூரில் தங்க வைத்ததுள்ளர். அமலாவின் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அவரது அம்மாவையும் அழைத்து சென்றிருக்கிறார் அதியமான். அமலா மட்டுமல்லாமல், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பல இளம்பெண்களிடம் இப்படித்தான் நெருங்கி பழகி, அரசு வேலை, கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி லட்சக்கணக்கான பணத்தை சுருட்டியிருக்கிறார். பல பெண்களை ஏமாற்றி பலாத்காரமும் செய்திருக்கிறாராம் அதியமான்.
இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அதியமான் கைதாகி உள்ளார். அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அமலாவின் நிர்வாண படம் உட்பட, வேறுசில பெண்களின் 150-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருந்ததாம். எப்படியும் ரூ.25 லட்சத்திற்கு மேல் பணத்தை பெண்களிடமிருந்து ஏமாற்றி பறித்திருக்கலாம் என்கிறார்கள். ராணுவ வீரரின் மனைவியை குடும்பத்தோடு கடத்தி அடைத்து வைத்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.