திருச்சி அருகே தவறுதலாக ஊக்கை விழுங்கி இரண்டு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த ஊக்கை வெற்றிகரமாக வெளியே எடுத்த அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
திருச்சி அருகே உள்ள, புதுக்கோட்டை விமான நிலையம் அருகில் உள்ள பர்மா காலணியை சேர்ந்த, இரண்டு வயது கை குழந்தை உணவு சாப்பிடும் போது, தவறுதலாக ஊக்கை விழுங்கிவிட்டது. அந்த ஊக்கு தொண்டையில் சிக்கி கொண்டதன் காரணமாக, குழந்தையால் மூச்சு விட முடியாமல், திணறி வந்தது. குழந்தையின் உடல் நலத்தில் என்ன பிரச்சனை? என்று தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வந்தனர்.
பின்பு அந்தக் குழந்தையை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இருக்கின்ற காது, மூக்கு, தொண்டை துறையின், தலைமை மருத்துவர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவ குழுவைச் சேர்ந்தவர்கள், அந்த குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது, அந்த குழந்தையின் தொண்டைப் பகுதியில், ஊக்கு திறந்த நிலையில், இருப்பதை கண்டுபிடித்து, அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், அந்த குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து,டியூப் மூலமாக வெளியே எடுத்துள்ளனர்.
பச்சிளம் குழந்தைகள் இது போன்று தவறுதலாக ஊக்குகளை விழுங்குவது சாதாரணமான நிகழ்வு தான் என்றாலும், திறந்த நிலையில், இருந்த ஊக்கை விழுங்கிய சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. தற்போது அந்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்தோடு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, இரண்டு வயது குழந்தையின் உயிரை காப்பாற்றியது குறித்து, அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.