திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விற்பனை தேதிகள் ஒரு மாதத்திற்கு முன்பாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த குறிப்பிட்ட நாளில் பக்தர்கள் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் இணையதளத்தில் சிறப்பு தரிசன டிக்கெட்டை விரைந்து முன்பதிவு செய்தனர்.

இதனால் 1.30 மணி நேரத்திலேயே ஜனவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வரையில் உள்ள நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் தீர்ந்து போயின. சுமார் 6 லட்சத்து 67 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் நேற்று ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஒன்றரை மணி நேரத்தில் 20 கோடியே ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.