நாடு முழுவதும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி 2,000, 500, 200, 100, 50 ரூபாய் புதிய நோட்டுகளை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக வருடங்களாக இந்த நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்துவதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வங்கி கிளையின் பெயர், வங்கிக் கணக்கு எண், பணம் செலுத்துபவரின் பெயர், ஆதார் எண், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அசல் ஆவணம் காட்ட வேண்டும். அந்த ஆவணத்தின் எண்ணையும் படிவத்தில் குறிப்பிடுவதோடு எத்தனை 2000 ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட உள்ளது. அதன் மதிப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.