போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 23 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் பெண்கள், சிறுமிகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டிலும் இந்த குற்றச்சம்பவம் அதிகரித்து வருவது பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதுவும் ஆசிரியர்களே இந்த செயலில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
இந்நிலையில், போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 23 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறையில் நிலுவையில் உள்ள 46 போக்சோ வழக்குகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், தற்போது 23 ஆசிரியர்கள் மீதான குற்றம் உறுதியாகியுள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
23 ஆசிரியர்களும் குற்றவாளிகள் என கருதி, அவர்களை பணியில் இருந்து நீக்கி, அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறையில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குகள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இதுவரை தமிழ்நாட்டில் 200-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான், 23 ஆசிரியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.