சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் வரும் 01-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும். உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சேலம் கிளை அலுவலகத்தில் (ஸ்ரீலட்சுமி காம்ப்ளக்ஸ், முதல்தளம், 4/22, ஓமலூர் மெயின் ரோடு, ஸ்வர்ணபுரி, சேலம் 838 004) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் வரும் 21.08.2023 முதல் 01,09,2023 வரை நடைபெற உள்ளது. இச்சிறப்பு தொழில்கடன் முகாமில் டி.ஐஐ.சி- யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள். மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்/தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு 94443 96850, 94443 96809 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.