சீனாவில் கடந்த 20 நாட்களில் 250 மில்லியன் பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்னும் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உருமாறிய பிஎஃப் .7 கொரோனா வைரஸ் சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது மீண்டும் கலக்கமடையச் செய்துள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகு சீனாவில் மளமளவென கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் நடத்திய 20 நிமிடக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு ஆவணத்தை ரேடியோ ஃப்ரி ஆசியா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது அது வைரலாகியுள்ளது. டிசம்பர் 1 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணம் சொல்கிறது. இது சீனாவின் மக்கள் தொகையில் 17.65 சதவிகிதம் என்பது கவனிக்கத்தக்கது. டிசம்பர் 20ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ரேடியோ ஃபிரி ஆசியா மதிப்பிட்டுள்ளது.

அதே சமயம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்கிற சுகாதார நிறுவனம் இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளது. அது, சீனாவில் தினமும் ஒரு கோடி பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்றும் 5,000-க்கும் மேல் உயிரிழப்புகள் இருந்திருக்கலாம் எனவும் கூறுகிறது. வரும் ஜனவரியில் நாள்தோறும் 37 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படலாம் என்றும், மார்ச் மாதம் நாள்தோறும் 42 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.