கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவது தமிழக மக்களுக்கு தெரியும். 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பயனாளிகள் கடந்த மாதத்தில் மட்டும் நீக்கப்பட்டிருக்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பை அடுத்து மத்திய பிரதேசம், கர்நாடகா தொடங்கி பல்வேறு மாநிலங்களில் மகளிருக்கு மாதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டெல்லியில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசும் மகளிருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாக கொடுப்போம் என வாக்குறுதி அளித்தது. பாஜக ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, மகளிர் உரிமை தொகை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா இந்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வரும் மார்ச் 8ஆம் தேதி 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:7 முறை கருக்கலைப்பு..!! பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே..!! சென்னையில் பரபரப்பு போஸ்டர்கள்..!!