அரபிக்கடலில் நிலைக் கொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததன் காரணமாக குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பைபர்ஜாய் புயல் காரணமாக கடலோர பகுதிகளில் வசித்த கர்ப்பிணி பெண்கள் 270 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த கர்ப்பிணி பெண்கள் தற்போது அழகான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக கட்ச் மாவட்ட ஆட்சியர் அமித் ஆரோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “மருத்துவமனையில் நிறை மாத கர்ப்பணிகள் 512 பேரை அனுமதித்துள்ளோம். அவர்களில் 274 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளது. புயல் கரையக் கடக்க இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் அனுமதித்து விட்டோம்” என்றார்.