இறந்த தனியார் நிறுவன மார்க்கெட்டிங் மேலாளரின் கணக்கில் இருந்து ரூ.28 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் பியூஷ் சர்மா, மகாராஷ்டிர மாநிலம் தானே நகரின் ஜி.பி. சாலையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில், இவர் கடந்த செப்டம்பர் 21, 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். பியூஷ் இறந்ததை அடுத்து அவரது தந்தை பிப்ரவரி 16, 2022 அன்று வங்கியை அணுகினார். இறந்துவிட்ட தனது மகனின் வங்கிக் கணக்கில் தான் ஒரு நாமினியாக இருப்பதாகக் கூறி, வங்கி அறிக்கையைக் கேட்டிருக்கிறார்.
வங்கியில் இருந்து பெற்ற அறிக்கையைப் பார்த்தபோது, செப்டம்பர் 30, 2021 முதல் ஏப்ரல் 22, 2022 வரை குமார் தீபக், குமார் டி, குமார் தீப் மற்றும் குமாரி ராஸ் ஆகியோருக்கு ரூ.28.3 லட்சம் பணம் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். இதுபற்றி போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதனால் பியூஷ் சர்மாவின் குடும்பத்தினர் சார்பில் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட் பி எஸ் துமாலின் உத்தரவுப்படி, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் வைபவ் சதம் தெரிவித்துள்ளது.