DOT: மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறை 28,200 மொபைல் ஃபோன்களை பிளாக் செய்வதற்கு தகவல் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் இந்த செல்போன்களுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் இணைப்புகளை மீண்டும் சரிபார்க்க ஆணை பிறப்பித்துள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தொடர்புத்துறை மதிய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல் துறைகள் ஒருங்கிணைந்து சைபர் குற்றங்கள்(Cyber Crime) மற்றும் நிதி மோசடிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கூட்டு முயற்சியானது மோசடி செய்பவர்களின் நெட்வொர்க்க்களை அகற்றுவதையும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 28,200 மொபைல் கைபேசிகள் சைபர் கிரைம்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல் துறைகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த செல்போன்களில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் தொடர்புத்துறை கண்டுபிடித்துள்ளது.
28,200 மொபைல் போன்களை பிளாக் செய்வதற்கும் இவற்றோடு தொடர்புடைய 20 லட்சம் மொபைல் எண்களை மறு சரிபார்ப்பு செய்வதற்கும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு தகவல் தொடர்புத்துறை வழிகாட்டுதல் அனுப்பி இருக்கிறது. மேலும் மறு சரிபார்ப்பில் தோல்வி அடைந்த எண்களை துண்டிக்குமாறு தகவல் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது
தகவல் தொடர்பு அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில், “ஒருங்கிணைந்த அணுகுமுறை பொது பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்வதற்கும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
சைபர் கிரைம் வழக்கில் தொலைத்தொடர்பு துறை இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. மேலும் செவ்வாய்க்கிழமை அன்று நிதி மோசடியில் ஈடுபட்ட செல்போன் நம்பரின் இணைப்பை துண்டித்ததோடு அந்த நம்பரோடு தொடர்புடைய 20 மொபைல் போன்களையும் தகவல் தொடர்புத்துறை பிளாக் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.