தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி செந்தில்குமார் மூன்று சவால்களை முன் வைத்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் “என் மண் என் மக்கள்’ யாத்திரையை தருமபுரி மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது அந்த மாவட்டத்தின் நிலை குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பின்தங்கிய மாநிலம் என்று திமுகவினர் கூறும் பீகாரின் பல மாவட்டங்களை விட, தருமபுரி பின்தங்கி உள்ளது.
ஆனால், இது குறித்த எந்தக் கவலையும் இன்றி, வட மாநில மக்களை அவதூறாகப் பேசி, மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். இதன்மூலம் அவர் தருமபுரி மக்களை தேசிய அளவில் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தர்மபுரியில் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த திமுக எம்பி செந்தில்குமார், மூன்று சவால்களை முன் வைத்தார்; வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தர்மபுரியில் போட்டியிடும் வேட்பாளரை எதிர்த்து நரேந்திர மோடி அவர்கள் போட்டியிட தயாரா..? தமிழகத்தில் அண்ணாமலை என்ற தொகுதியில் போட்டியிட்டாலும் அவரால் வெற்றி பெறவே முடியாது. கூட்டணி கட்சியை தவிர்த்து தர்மபுரி தொகுதியில் பாஜக வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கி காட்ட வேண்டும் என சவால் விடுத்துள்ளார்.
ஸ்வச் பாரத்’ திட்டத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவிக்கிறார். ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பத்து கழிவறைகள் என ஐம்பது கழிவறைகளைத் தேர்வு செய்து. அதில், 25 கழிவறைகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 3 லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது பயன்படுத்தாமல் குடோனாக தான் இருக்கிறது என்றார்.