புதுச்சேரியில் 3 இளைஞர்கள் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இங்கு 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதி என்பவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விசாரணையில் இறந்தவர்கள் ரிஷி மற்றும் தேவா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில், ரிஷி என்பவர் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜே.ஜே.நகரைச் சேர்ந்த ஆதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்த இடத்தில் டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பிரபல ரவுடியான தாதா தெஸ்தான் கடந்த 2008ஆம் ஆண்டு உழவர்கரை ஜெ.ஜெ. நகர் வீட்டில் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இவரது மகன் ரிஷி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் இவர்களது நடமாட்டத்தை கண்காணித்த எதிர்தரப்பினர், நள்ளிரவில் ரிஷி தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, திடீரென புகுந்து 3 பேரையும் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.