தற்போது தமிழ்நாடு முழுவதும் வழிப்பறி கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துவிட்டனர். அவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற சமூக விரோத செயல்கள் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில், சென்னை மதுரவாயல் கந்தசாமி நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் 17 இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சென்ற 28ஆம் தேதி கல்லூரி முடிவடைந்து மதுரவாயல் கந்தசாமி நகர் முதல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், யோகேஸ்வரனை கத்தியால் தாக்கி விட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றது.
அவர்கள் கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்த யோகேஸ்வரன், சிகிச்சை பெற்ற பிறகு இது தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் சம்பவ இடத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் அடிப்படையில், கல்லூரி மாணவனிடம் வழிப்பறி செய்த செம்மஞ்சேரி சுனாமி நகர் பரமேஸ்வரன் (24) அவருடைய நண்பர்கள் தேனாம்பேட்டை விக்னேஷ் (19), அதே பகுதியைச் சேர்ந்த சத்யா (24) உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கைபேசிகள், ஒரு கத்தி, ஒரு இரும்பு ராடு, இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டனர்.
பரமேஸ்வரன், விக்னேஷ் உள்ளிட்ட இருவரும் இணைந்து கோயம்பேடு, திருவேற்காடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனத்தை திருடி அவற்றில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர் என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.