கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதிலிருந்து தப்பிக்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஏசி பயன்படுத்த துவங்கியுள்ளனர். இன்னும் சிலர், குறைந்த விலையில் சில ஏசி மாடல்களை ஆன்லைனில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஏசி பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது மின் கட்டணம் தான். ஏனென்றால், ஏசி பயன்படுத்தும்போது வழக்கமான மின் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒரு வீட்டில் 1.5 டன் ஏசியை 8 மணி நேரம் பயன்படுத்தினால், எவ்வளவு மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் தெரியுமா..? தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளுக்கு 1.5 டன் ஏசி மாடலே போதுமானதாக இருக்கும். ஏனென்றால், நாம் பயன்படுத்தும் அறையின் அளவு பெரிதாகவும் இல்லாமல் சிறிதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கும். ஏசி மாடல்கள் அவற்றின் ஸ்டார் ரேட்டிங்கிற்கு ஏற்ப ஆற்றலை பயன்படுத்துகின்றன.
1 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியின் விலை மலிவானதாக இருந்தாலும் அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். பட்ஜெட் பிரியர்களுக்கு சிறந்த மாடல் என்றால் அது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் மாடல் ஏசி தான். இந்த ஏசி அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதில்லை. 1 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை விட இதில் மின் கட்டணம் குறைவாகத்தான் வரும். அதேபோல், 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிகள், விலை சற்று அதிகம் இருந்தாலும். மின்சார கட்டணத்தை பெரியளவில் குறைக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
3 ஸ்டார் ரேட்டிங் ஏசி
3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட 1.5 டன் ஏசி சாதனம் ஒரு மணி நேரத்திற்கு 1104 வாட்ஸ் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. எனவே, இந்த ஏசியை நீங்கள் 8 மணி நேரம் பயன்படுத்தினால், உங்களுக்கு 9 யூனிட் மின்சாரம் செலவாகும். உங்கள் பகுதியில் 1 யூனிட் மின்சாரம் ரூ.7.50 என்று வைத்துக் கொண்டால், நாளொன்றுக்கு ரூ.67.50 வரை செலவாகும். மாதம் ரூ.2,000 வரை செலவாகும்.
5 ஸ்டார் ரேட்டிங் ஏசி
ஒருவேளை, 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி மாடலை பயன்படுத்துகிறீர்கள் என்றால், அது 1 மணி நேரத்திற்கு 840 வாட்ஸ் மின்சாரத்தை உறிஞ்சும். உங்கள் பகுதியில் 1 யூனிட் ரூ.7.50 என்று வைத்துக் கொண்டால், 8 மணி நேரத்திற்கு ரூ.48 செலவாகும். ஒரு மாதத்திற்கு ரூ.1,500 வரை செலவாகும். 3 ஸ்டார் ரேட்டிங் ஏசியை விட இதில் ரூ. 500 மிச்சமாகிறது.
இவற்றையெல்லாம் விட, தற்போது சந்தையில் டூயல் இன்வெர்டர் ஏசி மாடல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்துவதினால், இன்னும் கணிசமான அளவு மின்சார கட்டணத்தை உங்களால் குறைக்க முடியும்.