ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து 3 வெற்றிகரமான தற்காப்புத் தாக்குதல்களை” நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. இதன்படி செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சமீபத்தில் அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
செங்கடலில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில், ஏமனில் ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறது. அந்தவகையில், நேற்று, ஹவுதி நிலைகளை குறிவைத்து 3 வெற்றிகரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த ஹூதி ஏவுகணைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் கடந்த வாரத்தில் நடத்திய நான்காவது முன்கூட்டிய தாக்குதல் இது என்று கூறினார். “இந்த நடவடிக்கைகள், தற்காப்புக்காக மட்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாக ஜான் கிர்பி தெரிவித்தார்.
“ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் சர்வதேச கடற்படையினருக்கு தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருவது கவலையளிப்பதாக கூறிய ஜான் கிர்பி, கடந்த வியாழன் அன்று அமெரிக்க கப்பல் மீது ஹூதி போராளிகள் நடத்திய தாக்குதலில் எந்த காயங்களும் சேதமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் செங்கடலில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்த தாக்குதல் சம்பவங்கள் உலக வர்த்தகத்தை சீர்குலைக்கிறது என்று கூறினார்.