உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி சிபி கஞ்ச் பகுதியில் பாண்டியா கிராமத்தில் வசிக்கும் அவதேஷ் கங்கா அவர் என்பவரின் மகள் பாரி. 3 வயது சிறுமியான இவர் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை கடித்தது. சுமார் 15இல் இருந்து 20 நாய்கள் சிறுமியை சூழ்ந்து கொண்டு கடித்துள்ளது. சிறுமியை நாய்கள் சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் சென்று சித்ரவதை செய்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த சிறுமியின் சகோதரர்கள் நாய்களை அடித்து விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த நாய்கள் சிறுமியின் சகோதரரையும் கடித்துள்ளது.
இதனைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அந்த சிறுமியின் உடலில் 200-க்கும் மேற்பட்ட நாய் கடி இருந்ததாக தெரிவித்தனர். சிறுமியின் சகோதரர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. நாய் கடித்து 3 வயது சிறுமி துடிதுடித்து இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.