வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்குவதால், தமிழகத்துக்கு இன்று அதி கனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இது, நேற்று காலை நிலவரப்படி, தென் மேற்கு வங்கக் கடலில், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது, இன்று மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், இன்று தமிழகத்தில் அதி கனமழை பெய்வதற்கான ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’டும் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைகண்ணன் அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நெருங்குவதால், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும்.

தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய, 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யலாம். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நாளை முதல் 14ஆம் தேதி வரை கன மற்றும் மிக க மழை பெய்யும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!
மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.