உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத்துக்கான விமான டிக்கெட் கட்டணம் தற்போது 350% வரை உயர்ந்துள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்கப் போட்டி, இறுதிப் போட்டி மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள், விவிஐபிக்கள், ஸ்பான்சர்கள் இப்போட்டிக்கான ஹோட்டல் மற்றும் பயண முன் பதிவுகளை ஏற்கனவே தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், போட்டி நாட்களில் அதிக தேவை இருக்கும் என்பதால், அக்டோபர் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முக்கிய நகரங்களில் இருந்து அகமதாபாத் செல்லும் விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து அகமதாபாத் வரையிலான இருவழி பயணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்தாலும் நேரடி விமானங்களில் நபர் ஒருவருக்கு ரூ.45,425 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சாதாரண சூழ்நிலையில், சென்னை அகமதாபாத் – இடையே இருவழிப் பயணத்திற்கு ரூ.10,000 மட்டுமே செலவாகும். உலகக்கோப்பை நடக்கும் தேதிகளில் மும்பை, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானக் கட்டணங்களும் 200% முதல் 325% அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐசிசி போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் இருப்பதால் மற்ற நகரங்களில் இருந்து அகமதாபாத்துக்கான விமான கட்டணம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய பயன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.