ஒசூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்து 3 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.. காப்பாற்ற சென்ற பள்ளி தலைமையாசிரியரும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த எழுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு 3 ஆம் வகுப்பு படித்து வந்த நிதின்(8) என்னும் மாணவர் மதிய உணவு இடைவெளியின் போது பள்ளியின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள விவசாய பாசனத்திற்காக நீர் சேகரிப்பு தொட்டியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
மற்ற மாணவர்களின் கதறல் சத்தம் கேட்கவே சம்பவ இடத்திற்கு ஆசிரியர்கள் விரைந்தனர். பள்ளியில் இருந்த தலைமையாசிரியர் கவுரி சங்கர் ராஜா(53) என்பவர் தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவனை மீட்க முயன்றுள்ளார். ஆனால் அவரும் வெளியே வராத நிலையில் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவன், பள்ளி தலைமையாசிரியர் இருவரின் உடலையும் சடலமாக மீட்டனர்.
உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். சடலத்தை நீரில் இருந்து மீட்ட பாகலூர் போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காப்பாற்ற சென்ற ஆசிரியரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்திய ஏற்படுத்தியுள்ளது.
Read more:நடிகர் சிங்கமுத்துக்கு எதிரான அவதூறு வழக்கு : நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர்..!