சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற நேரத்தில், இந்தியாவில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க இந்த நேரத்தில் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் ஒன்றுபட வேண்டும். பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், ஏழை எளிய மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய அழிவு பாதையில் இருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளது. இத்தகைய தவறான பொருளாதாரக் கொள்கையால், 4.6 கோடி இந்தியர்கள் கடும் வறுமையில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய தேசிய காங்கிரஸ், 1947இல் விடுதலைப் பெற்று உலக அரங்கில் இந்தியாவை ஒரு வல்லரசாக வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது.

பிரதமர் மோடியின் தீவிர ஆதரவினால், உலக பணக்காரர்களில் 4-வது இடத்தையும், ஆசியாவில் முதல் இடத்தையும் கெளதம் அதானி கைப்பற்றியிருக்கிறார். இந்த வளர்ச்சியின் அடிப்படையில் தான் பாஜகவின் நிதி ஆதாரங்கள் அமைந்துள்ளன. இதை 8 ஆண்டு கால மோடி ஆட்சியின் சாதனை என்பதா? மெகா ஊழல் என்பதா?. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதை மூடிமறைக்க நாடு முழுவதும் மதரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வகுப்பு கலவரங்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கின்றன. அதனால், இந்தியா வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நம்பகத்தன்மைமிக்க ஆக்ஸ்பார்ம் நிறுவனத்தின் அறிக்கையின்படி, நவம்பர் 2021 நிலவரப்படி 84% குடும்பங்களின் வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
ஆனால், இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102 இல் இருந்து 142 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூபாய் 23.14 லட்சம் கோடியிலிருந்து ரூபாய் 53.16 லட்சம் கோடியாக இருமடங்கு பெருகியிருக்கிறது. இத்தகைய சொத்துக் குவிப்புகளின் காரணமாகவும், தவறான பொருளாதார கொள்கையினாலும் 4.6 கோடி இந்தியர்கள் கடுமையான வறுமையில் சிக்கிக் கொண்டுள்ளனர்”. இவ்வாறு அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.