4 % அகவிலைப்படி உயர்வை 1.7.2023 – லிருந்து தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்க கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் சங்க கூட்டணி சார்பில் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில்; மத்திய அரசு தனது ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வை (D.A), ஜூலை முதல் தேதியில் இருந்து, ரொக்கமாக வழங்கிட ஆணைப் பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வை ஜூலை 1 முதல், ரொக்கமாக வழங்கிட உடனடியாக அரசாணை பிறப்பித்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு அகவிலைப்படி
பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம், 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்கிறது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற இருக்கிறார்கள். கெஜட்டட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.