பெங்களூரில் கடந்த மார்ச் 17ஆம் தேதி நகரத் பேட் பகுதியில் இஸ்லாமியர்கள் நமாஸ் செய்தபோது, மொபைல் கடைக்காரர் முகேஷ் என்பவர் அனுமான் பாடலை இசைத்ததாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முகேஷ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, அந்த கடைக்காரர் முகேஷ், நமாஸ் செய்யும் இளைஞர்களின் கோரிக்கைகளை நிராகரித்தபோதுதான் பதற்றம் அதிகரித்துள்ளது. இறுதியாக முகேஷ் அவரது கடையில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் குறித்து ஹலசுரு கேட் காவல் நிலையம் விரைந்து விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டதாக நம்பப்படும் சுலேமான், ஷாநவாஸ் மற்றும் ரோஹித் ஆகியோரை நேற்று (திங்கள்கிழமை) கைது செய்தது. மேலும் தருண் மற்றும் மைனர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டனர். இருப்பினும் இந்த விவகாரம் இந்து உணர்வுகள் மீதான தாக்குதலாக கருதப்படுவதாக கூறி கடைக்காரருக்கு ஆதரவாக நகரத் பேட்டையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது திடிரென்று பேரணி நடத்த முயன்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேரை பெங்களூரு போலீஸார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளை பேசியதற்காக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.