கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவப்படம் பொறித்த ’பே சிம்’ (Pay CM) போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பாஜக அமைச்சர்கள், 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆட்சியில் 40% கமிஷன் பெறப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்ட தொடங்கினர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவப்படம் பொறித்த ’பே சிம்’ (Pay CM) போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ‘இங்கே 40 சதவீத கமிஷன் பெறப்படும்’ என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. கியூ ஆர் ஸ்கேன் இருப்பது போன்றும், அதில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் உருவம் தெரிவது போன்றும் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரிலே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் என ஆளும் பாஜக கட்சியினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.