தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே சமயம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்த நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனைப் போலவே வழக்கமாக இருக்கும் மாணவர் சேர்க்கையை விட இந்த வருடம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் இல்லை என்பதால் உடனே பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 4,000 பேராசிரியர் பணியிடங்களை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.