மியான்மரில் மார்ச் 30 ஆம் தேதியான இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் சகாயிங் நகரின் வடமேற்கே, கடந்த 28ம் தேதி, 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த 12 நிமிடங்களில், 6.4 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால், மியான்மர் தலைநகர் நய்பிடாவ், மண்டாலே உள்ளிட்ட நகரங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
வானுயர்ந்த கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவை தரைமட்டமாகின. பாலங்கள், அணைகள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,376 பேர் காயமடைந்து உள்ளதாகவும், பலர் பேர் காணாமல் போயுள்ளதாகவும் மியான்மரில் ஆளும் ராணுவம் தெரிவித்துஉள்ளது.
இந்த நிலையில் மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களை பீதியடைய வைத்துள்ளது. மியான்மரில் உள்ள மண்டலேயில் இருந்து வடமேற்கே 13 மைல் தொலைவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், ஞாயிற்றுக்கிழமை மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது மண்டலேயில் வசிப்பவர்கள் அலறினர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.