தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் 30 மாடி கட்டடம் சரிந்து விழுந்த இடத்திற்கு சட்டவிரோதமாக சென்றதாக, கட்டட கட்டுமான திட்ட மேலாளர் உள்பட சீனர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்ததில், 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் உணரப்பட்டது. சாதுசாக் பகுதியில் அமைந்துள்ள 30 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. அப்போது, அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாங்காக்கில் பல்வேறு உயரமான கட்டிடங்கள் உள்ளன. நிலநடுக்கத்தின்போது சுமார் 95 சதவீத உயரமான கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பாங்காக்கில் பல்வேறு பழைய கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கி நிற்கின்றன. ஆனால் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து நொறுங்கியிருப்பது கட்டுமானத்தின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. சீனாவை சேர்ந்த ‘சைனா ரயில்வே எண் 10 இன்ஜினீயரிங் குரூப்’ என்ற நிறுவனம் டெண்டர் எடுத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தது. கட்டிடத்தின் திட்ட மதிப்பு ரூ.529.57 கோடி ஆகும்.
இதுகுறித்து தாய்லாந்து உள்துறை அமைச்சர் அனுடின் சார்ன் விரகுல் கூறுகையில், சீன நிறுவனத்தின் கட்டுமானம் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 7 நாட்களில் அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யும். குழு அளிக்கும் பரிந்துரைகளின் படி சீன நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உயர் நிலைக் குழு சம்பவ இடத்தில் விரிவான ஆய்வு நடத்தும்” என தெரிவித்தார்.
இது தொடர்பாக தாய்லாந்து அரசு விசாரணையில் இறங்கியுள்ள நிலையில், சட்டவிரோதமாக கட்டடம் இடிந்து விழுந்த பகுதிக்கு சென்றதாக, கட்டட கட்டுமான திட்ட மேலாளர் உள்பட சீன நாட்டைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த கட்டடத்தின் ஆவணங்களை அகற்றுவதற்காக, அனுமதியின்றி சீனாவைச் சேர்ந்த 5 பேர் வந்துள்ளனர். அவர்களிடம் எந்த அனுமதி கடிதமும் இல்லை, என்று கூறினார். இதனிடையே, இன்சூரன்ஸை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காகவே, ஆவணங்களை எடுக்க வந்ததாக கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
Read more: உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பத்தை ரஷ்யாவிற்கு விற்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்..? – இந்தியா மறுப்பு