மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் “பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது-2023” அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனிதகுதி வாய்ந்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக “பால சக்தி புரஷ்கார்” என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றைக் கொண்டதாகும்.
குழந்தைகள் மேம்பாடு. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக “பால கல்யாண் புரஷ்கார்” என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.
இவ்விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.gov.in என்னும் இணையதள பக்கத்தில் விண்ணப்பித்தல் வேண்டும். குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 31.08.2023 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.