தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே.பாலச்சந்திரன், ”வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இடத்தில் அதி கனமழையும், 7 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ மழையும் , தஞ்சையில் 17 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 7ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.. நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாடு மற்றும் தெற்கு கேரளாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை, அதிகபட்சமாக சென்னையில் 338.5 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக புதுக்கோட்டையில் 120.6 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
இன்று சென்னையில் 17.2 மில்லி மீட்டர் மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக ஊத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.