லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் 5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி மும்பை வீரர் ஆகாஷ் மத்வால் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2023 ஐபிஎல் போட்டி தொடரின் எலிமினேட்டர் சுற்றுப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ, தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, குவாலிஃபையர் 2-ல் குஜராத் அணியுடன் மோதவுள்ளது.
இந்த போட்டியில் மும்பை அணி பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி , வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி வெற்றிக்கு பெரும் பங்காற்றினார். இதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக , பெங்களூரு அணிக்காக விளையாடிய அணில் கும்ப்ளே 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தநிலையில், 14 ஆண்டுகால சாதனையை ஆகாஷ் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.