உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவைச் சேர்ந்த 35 வயதான பல்வந்த் சிங் என்பவர் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்ஹாரியாவில் உள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றி வந்தார். சுங்கக் கட்டணத்தில் பல்வந்த் சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பல்வந்த் சிங், சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
50 ரூபாய் திருடியதாக கூறி, 35 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வந்த் சிங் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரம் காவல்துறை கவனத்திற்கு சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த பல்வந்த் சிங்க 6-7 மாதங்களாக அங்கு பணியாற்றி வந்துள்ளார். பல்வந்த் மீது சக ஊழியர்கள் திருட்டு புகார் கொடுத்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக பவுன்சர்கள் மற்றும் சில சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், கோன்டாவில் உயிரிழந்த பல்வந்த்தின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பவுன்சர்களில் 4 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இருவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.