பிசிசிஐயின் பசுமை விழிப்புணர்வாக, நடப்பு ஆண்டு பிளே ஆப் சுற்றுகளில் போடப்படும் டாட் பால்கள் ஒவ்வொன்றிற்கும், 500 மரங்கள் நடப்படவுள்ளன.
சென்னை – குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் டாட் பால் வந்தபோதெல்லாம் மரக்கன்றுகள் காண்பிக்கப்பட்டது. இது எதற்காக என்று பலரும் குழப்பமான சூழ்நிலையில் இருந்ததை அடுத்து இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, பிளே ஆப் சுற்று தொடங்கியது. முதலாவது தகுதிப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தப் போட்டியில் பவுலர்கள் வீசிய ஒவ்வொரு டாட் பாலுக்கும் டிவி ஸ்கோர் கார்டில் புள்ளிக்குப் பதிலாக மரக்கன்று அடையாளம் காட்டப்பட்டது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. போட்டியின்போது பந்து வீச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு டாட்பாலுக்கும் 500 மரங்கள் நடுவதற்கு டாடா மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமை முயற்சியாக பிளே ஆஃப் போட்டிகளில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பாலுக்கும் இந்தியா முழுவதும் 500 மரங்களை நடும் பெரிய முயற்சியை பிசிசிஐ எடுத்துள்ளது. அதன்படி, சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் மொத்தம் 84 டாட் பால்கள் போடப்பட்டுள்ளது. எனவே, இரண்டு அணிகளுக்கும் மொத்தமாக 42,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனை நடவும் செய்து வருகின்றார்கள்.