Job: மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ துறை காலிப்பணியிடங்களை, இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் கூறினார்.
இந்தியா – மேற்கு ஆஸ்திரேலியா இடையே மருத்துவம் உள்ளிட்ட இணைப்பை வலுப்படுத்தும் வகையில், அம்மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன், கடந்த 22ம் தேதி முதல் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளை பார்வையிட்ட அவர், தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் பார்வையிட்டார்.
பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஐந்தாண்டுகளில், எங்களது மருத்துவ சேவை அமைப்புகள் இரண்டு மடங்காக விரிவடைந்துள்ளன ஆனால், மருத்துவர்கள் செவிலியர்கள் என, 5,000க்கும் மேற்பட்டோர், மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு தேவைப்படுகின்றனர். எங்கள் நாட்டில், 60 முதல் 65 வயதுடையோர் அதிகம் உள்ளனர். இதனால், கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிப்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.
அதேநேரம், தேவையை விட கூடுதல் மருத்துவ பணியாளர்கள் இந்தியாவில் உள்ளனர். அவர்களுக்கு இடம் பெயர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. மருத்துவ பணியாற்றுதல், கல்வி பயிலுதல் போன்றவற்றிற்கு மேற்கு ஆஸ்திரேலியா சிறந்த இடமாக இருக்கும். இதன் வாயிலாக, இரு நாட்டை சேர்ந்தவர்களும் பயனடைவர். குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் பெற்று, தகுந்த கல்வி தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்ற தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. கல்வியை பொறுத்தவரை சலுகைகள் வழங்கப்பட்டு வருவதுடன், சென்னையில் இருந்து நேரடி விமான சேவை வழங்குவது குறித்தும் பேச்சு நடந்து வருகிறது என்றும் கூறினார்.
Readmore:IPC-க்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 2024 முதல் அமல்.! மத்திய அரசு அறிவிப்பு.!