செல்லாத, சரியாக இல்லாத அல்லது போலியான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 6.80 லட்சம் செல்பேசி இணைப்புகளை தொலைத் தொடர்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய மோசடி இணைப்புகளை அடையாளம் காணுதல்: மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு உந்துதல் பகுப்பாய்வு மூலம், தொலைத் தொடர்புத் துறை சுமார் 6.80 லட்சம் செல்பேசி இணைப்புகளை மோசடிக்கு சாத்தியமுள்ளவை என்று கண்டறிந்துள்ளது.
மறு சரிபார்ப்புக்கான உத்தரவு:
அடையாளம் காணப்பட்ட இந்த செல்பேசி எண்களை உடனடியாக மறு சரிபார்ப்பு செய்யுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குவோருக்கு தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குவோரும் அடையாளம் காணப்பட்ட இணைப்புகளை 60 நாட்களுக்குள் மீண்டும் சரிபார்க்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறு சரிபார்ப்பை முடிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட செல்பேசி எண்களின் சேவை துண்டிக்கப்படும்.
ஒருங்கிணைந்த முயற்சிகள் பலன்களைத் தருகின்றன: பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவை இந்த மோசடி இணைப்புகளை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. செல்பேசி இணைப்புகளின் நேர்மை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மறு சரிபார்ப்பை தொலைத் தொடர்புத் துறை கோரியுள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க தொலைத் தொடர்புத் துறை உறுதிபூண்டுள்ளது.