டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றிருந்த இந்தியா, முதல் நாளில் பிரமாதப்படுத்தியது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த தமிழர்களான ராம்குமார், ஸ்ரீராம் பாலாஜி இருவரும் வெற்றியை தேடித்தந்தனர். இதனால் முதல் நாளில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
2-வது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- சகெத் மைனெனி ஜோடி, பாகிஸ்தானின் முஜாமில் முர்தசா- அகீல் கான் இணையை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி- மைனெனி கூட்டணி 6-2, 7-6 என்ற நேர் செட்டில் முர்தசா இணையை தோற்கடித்து தொடரையும் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் புதுமுக வீரர் நிக்கி பூனச்சா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் முகமது சோயிப்பை வீழ்த்தி அசத்தினார். 5-வது ஆட்டம் நடத்தப்படவில்லை.
முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக்கொண்டது. இதற்கு முன்பு மோதிய 7 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.