நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவியாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு தெரிவித்துள்ள அவர், தாம் சுறுசுறுப்பாக பணியாற்றிய காலத்தில் கலைத்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அல்லது இன்னும் வழங்கிக் கொண்டிருந்தாலும், வயது முதுமை காரணமாக நிலையான வருமானம் ஈட்ட முடியாத நிலையில் உள்ள கலைஞர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கூறியுள்ளார். ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாதவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்படுத்துதல் மற்றும் முன்கற்றல் அங்கீகாரம் வாயிலாக மறுதிறன் பயிற்சி அளிப்பதற்காக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தை 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2015-2016 முதல், 2021-2022 வரை பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி நாடு முழுவதும் மொத்தம் 13,724,226 இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 7,59,666 இளைஞர்களும், புதுச்சேரியில் 30,327 இளைஞர்களும் திறன் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 2024 வரை பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 8,24,589 இளைஞர்களில் 1,72,336 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரியில் பயிற்சி பெற்ற 32,735 இளைஞர்களில் 10,504 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.