வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024 அக்டோபரில் வழங்கவேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக முன்கூட்டிய தவணையான ரூ. 89,086.50 கோடியும் இதில் அடங்கும். தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்தியில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது.
வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி / நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்றவகையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.