8-வது ஊதியக்குழு உருவாக்குவதற்கு பிரதமர் மோடி அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது தங்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் அகவிலைப்படியாக பெறுகிறார்கள். 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி சம்பள அமைப்பு, ஓய்வூதிய அமைப்பு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. 8-வது ஊதியக் குழுவின் உருவாக்கத்துடன் சம்பள அமைப்பு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
8-வது ஊதியக்குழுவின் சம்பள உயர்வின் சரியான சதவீதம் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், பிட்மென்ட் காரணியின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த பிட்மென்ட் காரணி 2.57ல் இருந்து 2.86 ஆக உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000-இல் இருந்து ரூ.51,480ஆக உயரும்.
7-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக இருப்பதால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. 7-வது ஊதியக் குழுவின் கீழ் மொத்த குறைந்தபட்ச சம்பளம் ரூ.36,020 ஆக உயர்ந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் 8-வது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச சம்பளம் 186% உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.