திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களைக் குறிவைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் விவாகரத்து ஆன தனது மகனுக்கு மறுமணம் செய்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில், திருமணத் தரகர் மூலம் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமான சில நாட்களிலேயே இந்திராணி மகனிடம் மாத வருமானம், வீட்டின் பீரோ சாவி ஆகியவற்றை தன்னிடம்தான் கொடுக்க வேண்டும் என சொல்லி சரண்யா சண்டையிட்டுள்ளார். கணவன் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டுமெனவும் அவர் அடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சரண்யா தனது மாமியார் இந்திராணியை வீட்டை விட்டு துரத்தியதால் மனமுடைந்த கணவன், சொத்துக்களை மாற்றித்தர முடிவு செய்து சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். சரண்யா ஆவணங்களைக் கொடுத்த போது அதில் C/O என்ற இடத்தில் ரவி என இருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த இந்திராணி மற்றும் அவரது மகன் ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர். பின்னர், ஜோலார்பேட்டையில் பதுங்கியிருந்த சரண்யாவை ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த சுகுணாவுக்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு மகள்களும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வந்த சுகுணா வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால், திருமண புரோக்கர்கள் உதவியுடன் சரண்யா, சந்தியா என பெயரை மாற்றி, மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்திராணி மகனை திருமணம் செய்ய வயதைக் குறைத்துக் காட்டுவதற்காக பியூட்டிபார்லருக்கு சென்று முடியைத் திருத்தி அழகுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதேபோன்று, ஜோலார்பேட்டையை சேர்ந்த ரயில்வே உணவு காண்டராக்டரான சுப்ரமணியன் என்பவரை ஏமாற்றி சந்தியா என்ற பெயரில் திருமணம் செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுகுணா, சந்தியா, சரண்யா என பல பெயர்களை பயன்படுத்தி பலரை திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் யார் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.