கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடி விபத்து காரணமாக பட்டாசு குடோன் மட்டுமல்லாது அருகில் இருந்த ஹோட்டல், 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருந்தனர். வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து மேலும் சிலரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. வெடி விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். வெடி விபத்து நடந்த இடத்தை எம்எல்ஏக்கள் மதியழகன், அசோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
வெடி விபத்தில் பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ரித்திஷ் ஆகியோர் உயிரிழந்தனர். பட்டாசு குடோன் அருகில் இருந்த ஹோட்டல் கடை உரிமையாளர் ராஜேஸ்வரி, இப்ராஹிம், இம்ரான் உள்பட 9 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இப்ராஹிம், இம்ரான் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஆவர். ஹோட்டலில் வெடித்துச் சிதறிய சிலிண்டர், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதும் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சரயு, மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பட்டாசு குடோன் வைப்பதற்கு அனுமதி எப்படி கொடுத்தார்கள் என்ற விசாரணை நடைபெறுவதாக கூறினார். கிருஷ்ணகிரியில் 9 பேர் பலியாகக் காரணமான பட்டாசு குடோன் விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு குடோன் அருகில் செயல்பட்ட ஹோட்டலில் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த பட்டாசு குடோனில் தீப்பற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.