புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்னைகளால் 2100 ஆம் ஆண்டிற்குள் 97 % பென்குயின்கள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அண்டார்டிகா கண்டம் அரிய வகை உயிரினங்களுக்கு மிகவும் பாதுகாப்பான வசிப்பிடமாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் பல பிரச்னைகளை சந்தித்தும், அழிவை நோக்கி நகர்ந்தும் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை கழகம் நடத்திய ஆய்வில், பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உலக பருவநிலை மாற்றத்தினால் அண்டார்டிகாவில் உள்ள பனி தொடர்ந்து உருகி வருகிறது.
இதனால், அண்டார்டிகாவில் உள்ள பனி நிலப்பரப்பு குறைந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் ஒன்றிணைந்து சிறிய அளவிலான தொகையினை ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து முதலீடு செய்தால் அண்டார்டிகாவில் உள்ள 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பறவைகள், உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காப்பாற்றப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.