திருப்பூர் அருகே ரூ.5 கோடி கேட்டு சிறுவனைக் கடத்திக் கொண்டு கேரளாவிற்கு சென்ற இளைஞர் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அருகே மகாலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் சிவக்குமார் – கவிதா தம்பதியினர். இவர்களின் மகன் அஜய் பிரணவ் . கட்டிடப்பொறியாளர் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகின்றார். கட்டிட ஒப்பந்ததாரர் ராகேஷ் என்பவருடன் சமீபத்தில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று ராகேஷின் ஆட்கள் சிவக்குமாரின் வீட்டுக்குச் சென்று கவிதா மற்றும் சிவக்குமார் ஆகியோரை கட்டிப்போட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் மகனை வைத்து மிரட்டலாம் என நினைத்த கும்பல் எங்கே உங்களது மகன் என கேட்டுள்ளனர். அந்த சமயத்தில் டியூசன் முடிந்து வந்த பிரணவ் பெற்றோர்கள் கட்டிப்போடப்பட்டு இருப்பது கண்ட அதிர்ச்சியடைகின்றார். அவனைக் கண்ட கும்பல் பிரணவை காரில் கடத்திக் கொண்டு கேரளாவின் கொல்லம் பகுதிக்குச் சென்றனர்.
5 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பையனை அழைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்ட கும்பல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கேரள போலீசும் விவரங்களை சேகரித்து மாணவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது துப்பாக்கி முனையில் மாணவரைக் கடத்திச் சென்ற அந்த இளைஞரின் முகம் வெளிப்பட்டது. இதனால் அவமானத்தால் அந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவரை மீட்ட கொல்லம் காவல்துறையினர் தமிழக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாணவரை திருப்பூர் அழைத்துவருவதற்காக கேரள மாநிலம் கொல்லம் விரைந்துள்ளனர்.