கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு பள்ளியில் கடந்த 2014ஆம் ஆண்டு 7ஆம் வகுப்பு மாணவியும், 8ஆம் வகுப்பு மாணவியும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இதில் 13 வயதான 7ஆம் வகுப்பு மாணவி பெற்றோரை இழந்தவர் என்பதால், தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இவர், அருகில் உள்ள இட்லி கடைக்கு சென்ற போது, அந்த கடை உரிமையாளரான செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி என்பவர், தனது கள்ளக்காதலன் ஆனந்தராஜூடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை மாணவி நேரில் பார்த்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்து, கட்டாயப்படுத்தி, தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆனந்தராஜ் அந்த மாணவியை அடிக்கடி மிரட்டி, தனது நண்பர்களான மோகன் என்ற மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோருக்கும் விருந்தாக்கியுள்ளார். பின்னர், தனலட்சுமி 13 வயது மாணவியை மிரட்டி, அவரது தோழியான 8ஆம் வகுப்பு மாணவியையும் ஆனந்தராஜுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.
பிறகு அந்த மாணவிகளை தனலட்சுமி, விபச்சார புரோக்கர் கலாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அன்பு என்ற செல்வராஜ் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். பின்னர், திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரது வீட்டிற்கு இரண்டு மாணவிகளும் 2 நாட்களுக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் 13 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதே போல் கலாவும், தனலட்சுமியும் சக புரோக்கர்களும் 2 மாணவிகளையும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), அவரது மனைவி தமிழரசி ஆகியோருக்கு மாணவிகள் விற்கப்பட்டதாக தெரிகிறது. அவர்கள் 2 மாணவிகளையும் வாடகை வீட்டில் தங்க வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். அப்போது மாணவிகள் இருவரும் சதீஷ்குமாரின் வாடகை வீட்டில் இருந்து தப்பித்து திட்டக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ்குமார், தமிழரசி, மதபோதகர் அருள்தாஸ் உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில், மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், 19 பேர் மீது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் 17 பேரில் 16 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசி ஆகியோரையும் போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.