சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர ராம்மோகன் நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்கும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன: அதன்படி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். ரத்து செய்யப்பட்ட விமானக் கட்டணங்களை முழுமையாக திருப்பி அளிப்பதை இது உறுதி செய்யும் அல்லது அந்த விமானங்களுக்கு ஏற்ப மாற்று பயண வழித்தட டிக்கெட்டுகளை வழங்க இந்த அறை ஏற்பாடு செய்யும் என அவர் தெரிவித்தார்.
விமானக் கட்டணங்கள் அதிக அளவில் உயராமல் பராமரித்தல், விமான நிலைய கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு சமர்ப்பித்தல் போன்றவை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போதைய சவால்களுக்கு விரைவான தீர்வை உறுதி செய்யவும், நமது விமான நிலையங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.